வெண்பாதிரி மரம் தலவிருட்சமாக கொண்டதாலும், புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் வழிபட்ட தலமாதலாலும் 'பாதிரிப்புலியூர்' என்று பெயர் பெற்றது. வியாக்ரபாத முனிவர் சிதம்பரம் நடராஜரின் தரிசனத்தைத் தரிசிப்பதற்கு முன்பே ஏற்பட்ட கோயில் இது என்பர். சாபத்தால் முயலுருவம் பெற்ற மங்கள முனிவர் தமது சாபம் நீங்கப் பெற்ற தலம் இது.
அழகிய பெரிய கோயில், மூலவரும், அம்பிகையும் பெரிய வடிவில் அற்புதமாக அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலில் இரவு நடைபெறும் பள்ளியறை பூஜை சிவவாத்தியங்கள் முழங்க சிறப்பாக நடைபெறுகிறது. அக்கினி, கங்கை ஆகியோர் வழிபட்ட தலம்.
சமணர்களின் தூண்டுதலால் பல்லவ மன்னன் திருநாவுக்கரசரைக் கல்லில் கட்டி கடலில் எறிய, சுவாமிகள் 'சொற்றுணை வேதியன்' பதிகம் பாடி கரையேறிய தலம். அப்பர் கரையேறிய இடம் தற்போது 'கரையேறவிட்ட குப்பம்' என அழைக்கப்படுகிறது. பின்னர் அப்பர் 'ஈன்றாளுமாய்' திருப்பதிகம் பாடினார்.
சம்பந்தர் ஒரு பதிகமும், அப்பர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். அருணகிரிநாதர் இத்தலத்து முருகப்பெருமானை தமது திருப்புகழில் பாடியுள்ளார். காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடை திறந்திருக்கும்.
|